சென்னை: காவிரி பாசன பகுதியில் களைகளை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
காவிரி பாசன பகுதியில் சுமார் 14 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை, திருச்சியில் 5 வட்டங்களும், கடலூர் மாவட்டத்தில் இரண்டு வட்டங்களும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வட்டமும் அடங்கும்.
இப்பகுதியில் முதன்மையான பயிர் நெல். இதனை களைகளில் இருந்து காப்பாற்றினால் 34 % விளைச்சலை நடவு வயலிலும், 60% நேரடி நெல் விதைப்பிலும் விளைச்சலை அதிகரிக்க ஒருங்கிணைந்த களை மேலாண்மையை மேற்கொள்ள தஞ்சை மாவட்ட வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை விட விரைவாக வளர்ந்து பல இடங்களிலும் பரவும் தன்மையை களைகள் பெற்றுள்ளது. மேலும் பயிருக்கு இடும் உரங்களை களைகள் எடுத்துக் கொண்டு வீரியமாக வளர்கிறது. எனவே களைகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவது அத்தியாவசியமாக கருதப்படுகிறது.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்:
முழுமையாக களைகளை அழிப்பது முடியாது என்றாலும், பயிரின் வளர்ச்சி பருவத்தில் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகிறது. உளவியல் முறைகள், சாகுபடி முறைகள், கைகளால் களை எடுப்பு, கருவி மற்றும் இயந்திர களை எடுப்பு முறைகள், உயிரியல் களை கட்டுப்பாடு ரசாயன களைக்கட்டுப்பாடு ஆகியவற்றை சூழ்நிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.
கோடை உழவு செய்தல் உரிய முறையில் உழவு செய்வது தகுந்த பயிர் சுழற்சியை கடைப்பிடித்தல், வாய்க்கால் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைத்திருத்தல். களை விதை இல்லாத நெல் விதைகளை உபயோகித்தல் பாசன நீர் மூலம் பரவுவதை தடுத்தல் போன்ற வழிகளை கையாள வேண்டும்.
நடவு வயலில் களை கட்டுப்பாடு:
நெல் நடவு வயலில் களைகள் முளைப்பதற்கு முன்பு, களை முளைத்த பின்பு பயன்படுத்தும் களைக்கொல்லிகளை சரியான தருணத்தில் மண்ணில் இடுவது, களைகளின் மேல் தெளிப்பது, சரியான நேரத்தில் செய்வது செலவு குறைவான களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும்.
களை முளைப்பதற்கு முன் இடும் பூட்டோகுளோர் கிலோ ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் 20 கிலோ மணலில் கலந்து நடவு நட்ட மூன்றாவது நாளில் சீராக தண்ணீர் கட்டி இடவேண்டும். அல்லது நடவு நட்ட முதல் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பென்சல்ப்யூரான் மிதைல் மற்றும் பிரிட்டில்லாகுளோர் கலவை குருணையை ஏக்கருக்கு நாலு கிலோ வீதம் மணலில் கலந்து விட வேண்டும். 50 கிராம் அல்லது ஆக்சிடயாக்ரில் 50 கிராம் அல்லது ஈத்தாக்ஸிசல்ப்யூரான் ஈத்தைல் ஏக்கருக்கு 60 கிராம் என்ற அளவில் நடவு செய்த மூன்றாம் நாள் வயலில் தெளிக்க வேண்டும். களை முளைத்த பின் நட்ட 15 நாட்களில் களைகள் 3 அல்லது 4 இலைப்பருவத்தில் பீஸ்பைரி பாக்ஸ் சோடியம் ஏக்கருக்கு 80-100 மில்லி தெளிக்க வேண்டும். 45 வது நாட்களில் கைகளால் களை எடுத்திட வேண்டும்.
நேரடி நெல் விதைப்பில் களை கட்டுப்பாடு:
நேரடி நெல் விதைப்பு வயல்களில் 54 சதம் ஒரு விதை இலை களைகளும், 46 சதம் இருவிதை இலை களைகளும் நெல் விதைகள் முளைக்கும் முன்பே போட்டியிட்டு வளர்கிறது. ஒரு விதை இலை களைகளில் 50 சதத்திற்கு மேல் குதிரைவாலி முளைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இரு விதை இலை களைகளில் ஆலக்கொடி முக்கிய களையாகும். இவைகளை ஆரம்ப வளர்ச்சி காலத்தில் கட்டுப்படுத்த விதைப்பு செய்த எட்டாவது நாள் பிரிட்டிலா குளோர் ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் நிலையில் சீராக தூவி விட வேண்டும். இது புல் மற்றும் கோரை வகை கமைளகளை நன்கு கட்டுப்படுத்தும். பின்னர் 15 வது நாளில் களை முளைத்து மூன்று இலைப்பருவத்தில் ஏக்கருக்கு 80 மில்லி பிஸ்பைரிபாக் சோடியம் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் களைக்கொல்லி இடாத பட்சத்தில் 20 மற்றும் 40 வது நாட்களில் கைகளால் களை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசனப்பகுதியில் ஒரே நேரத்தில் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்வதால் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க சரியான தருணத்தில் களைக்கொல்லி இடுவதன் மூலம் போட்டி போட்டு பயிருடன் வளரும் களைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் போடப்படும் உரங்களை நெல் பயிர் எடுத்துக்கொண்டு பயிர் நன்கு தூர் கட்டி அதிக மகசூல் கிடைப்பதுடன், செலவினை குறைத்து எதிர்பார்க்கும் லாபத்தை எளிதாக எடுக்க முடியும்.