புதுடில்லி: அமெரிக்க குடிமக்களை குறிவைத்து சைபர் மோசடி செய்த கும்பலை ஒழித்ததற்காக, அமெரிக்க அரசு சிபிஐக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அந்த கும்பல், அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் ரூ.350 கோடிக்கும் மேல் பணத்தை பறித்தது. அமிர்தசரஸில் உள்ள குளோபல் டவர் கட்டிடத்தில் “டிஜிகாப்ஸ் – தி ப்யூச்சர் ஆப் டிஜிட்டல்” என்ற போலி கால் சென்டர் நடத்தி வந்தது. இந்த மோசடி கும்பலை, சிபிஐ – எப்பிஐ இணைந்த நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.

சோதனையில், கும்பல் உறுப்பினர்கள் ஜிகர் அகமது, யஷ் குரானா, இந்தர் ஜீத் சிங் பாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.54 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட முக்கிய சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்:
👉 “இந்தியா – அமெரிக்கா இணைந்து நடத்திய முக்கியமான சட்ட நடவடிக்கையின் சிறப்பான வாரம் இது. பகிரப்பட்ட தகவல் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சைபர் மோசடிகளை தடுக்கும் பணியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. சிபிஐ வழங்கிய ஆதரவும், பங்களிப்பும் பாராட்டத்தக்கது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், உலகளவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த இந்தியா – அமெரிக்கா கூட்டாண்மை வலுப்பெற்றுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.