மதுரை: நீதிமன்றம் உத்தரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பதை தடுக்க வேண்டும். அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், ஆன்லைனில், சிறப்பு தரிசன டிக்கெட் 100 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், சில நபர்களுக்கு கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதாக கூறி, 2000 ரூபாய் வரையில் வசூலிப்பதாக, கூறப்பட்டுள்ளது.
பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு வழக்கறிஞர், கோவிலின் திரிஹரசுந்தரர்களே இதுபோல சட்டவிரோத டிக்கெட் விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கோவிலின் பாதுகாப்பிற்கு தேவைப்படும் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்த உத்தரவிட்டனர்.
கோவிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.