திருவனந்தபுரம்: அடுத்த மாதம் 20ம் தேதி கேரளாவின் பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப பக்தர்கள் சங்கமம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். அண்டை மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பிறரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், 2019ம் ஆண்டு சபரிமலைக்கு நுழைந்த சர்ச்சைக்குரிய பெண் பிந்து அம்மணி, இந்த உலக ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்க அனுமதி தருமாறு கேரள அரசுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஐயப்ப பக்தர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “மாநில அரசுடன் இணைந்து திருவனந்தபுரம் தேவசம் போர்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. பிந்து அம்மணிக்கு அழைப்பு விடுக்கும் தேவையில்லை. அவர் எந்த வகையிலும் ஐயப்ப சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்” என்று தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம் பிந்து அம்மணியின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து பங்கேற்க வரும் பக்தர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், மதச் சடங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக உரைகள் இடம்பெற உள்ளன.