சென்னை: உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களும் சரி, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தாலும் சரி நீங்கள் தினமும் காலையில் ஒரு சூடான கப் தண்ணீருடன் அன்றைய நாளைத் தொடங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது.
சுடுதண்ணீரை ஒரு டீடாக்ஸ் நீராக கருதலாம், இதனை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகிறது. வெந்நீரில் நன்மைகள் அதிகமாகி இருக்கிறது என்பதற்காக அதனை கணக்கில்லாமல் குடித்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் எவ்வளவு நல்ல பொருளாக இருந்தாலும் அது அளவுக்கு மீறினால் உங்களுக்கு ஆபத்தை தான் விளைவிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது, நீராவி பிடிப்பது போன்றவற்றைச் பற்றி நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் பல காலம்காலமாக இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் அதிகளவு வெந்நீரை பயன்படுத்தாமல் மிதமான அளவு பயன்படுத்துவது எப்போது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதேபோல அதிகளவில் சூடான நீரை பயன்படுத்துவதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக தண்ணீர் குடிப்பது நமது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
வெந்நீர் குடிப்பது நல்ல சருமம், சரியான செரிமான ஆரோக்கியம் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சூடான நீர் செரிமான மண்டலத்தை மென்மையாக்கி எவ்வளவு கடினமான உணவுகளையும் எளிதில் ஜீரணமடைய செய்துவிடுகிறது. குளிர்ந்த நீரை நாம் குடிப்பதை காட்டிலும் சூடான நீரை குடிப்பது நமது செரிமான மண்டலத்தை தூண்ட உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் சூடான நீர் உதவுகிறது
இதனை பருகுவதால் உடலின் வெப்பம் அதிகரித்து வியர்வை உண்டாகிறது, அந்த வியர்வையின் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் புத்துணர்வு பெறுகிறது. பொதுவாக சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது சூடான நீரை குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாது சூடான நீர் உங்கள் சரும செல்களை சரிசெய்து, சருமத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கிள்களை குறைக்கிறது. இதனால் உங்கள் சருமம் மிருதுவாகி, இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கலாம், இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்க உதவும். மேலும் சளி மற்றும் நாசி அலர்ஜியால் ஏற்படும் சைனஸை குறைக்கிறது. அதேசமயம் தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால், அது உங்கள் நாக்கு மற்றும் சுவை மொட்டுகளை பாதிக்கப்படும் மற்றும் உணவுக்குழாய் மற்றும் வயிறு போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படும்.