புதிய நாடாளுமன்றத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில், வினாத்தாள் வெளியில் கசிகிறது, உள்ளே மழைநீர் கசிகிறது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தண்ணீர் பாயும் வீடியோக்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே வினாத்தாள்கள் கசிவதாகவும், நாடாளுமன்றத்துக்குள்ளே மழைநீர் கசிவதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது என்றார். நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், இதை விட பழைய நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் ‘சொட்டு நீர் பாசன திட்டம்’ செய்யும் வரை, பழைய பார்லிமென்ட் கட்டடத்திற்கு ஏன் செல்லக்கூடாது என விமர்சித்தார். பாரதிய ஜனதா ஆட்சியில் கட்டப்படும் ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும், தண்ணீர் கசிவு என்பது அவர்களின் பிரம்மாண்டமான வடிவமைப்பின் ஒரு பகுதியா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார். 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 120 ரூபாய் மதிப்புள்ள வாளியை நம்பி இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.