லண்டன் அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கல்வி விசா முடிந்த பிறகும் தங்கியிருக்கும் மாணவர்களை கண்டிப்பாக வெளியேற்றுவோம் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 14,800 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 5,700 விண்ணப்பங்கள் பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்களிடமிருந்து வந்துள்ளன.

இந்திய மாணவர்கள், வங்கதேசம் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் புகலிடம் கோரியுள்ளனர். இதனால் பிரிட்டன் அரசாங்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை அனுப்பி வருகிறது. உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறுகையில், ஆண்டுதோறும் 15,000 மாணவர்கள் விசா காலம் முடியும் தருவாயில் புகலிடம் கோருவதாகவும், இது ஹோட்டல்கள் மற்றும் புகலிட விடுதிகளில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும், “இங்கிலாந்தில் தங்குவதற்கு உங்களுக்கு சட்ட உரிமை இல்லையென்றால், நீங்கள் வெளியேற வேண்டும். வெளியேறவில்லை என்றால் நாங்கள் உங்களை வெளியேற்றுவோம். தொடர்ச்சியான குழப்பத்தை சரிசெய்ய இதைத் தவிர வேறு வழி இல்லை” என்றார். இந்த எச்சரிக்கை, தற்போது விசா முடிவடையும் நிலையில் இருக்கும் பல்வேறு மாணவர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி விசா பெற்று பிரிட்டன் வரும் மாணவர்கள், கல்வி முடிந்த பிறகு புகலிடம் கோருவது வழக்கமாகிவிட்டது. ஆனால், புதிய கொள்கை காரணமாக இனி அந்த வழி மூடப்பட்டுள்ளதாக மாணவர்களிடையே பதட்டம் நிலவுகிறது. பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கை மூலம் குடியேற்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகிறது.