சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை லோக்சபா தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பழனிசாமி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அனைத்து நிர்வாகிகளும் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களை கட்சியில் சேர்த்து பலப்படுத்த வேண்டும். உள்ளூர் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு போராட்டம் நடத்த வேண்டும்.
கடுமையாக உழைக்க வேண்டும்: 2026 சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். ஐடி அணியை பலப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு எதிராக இணையத்தில் பரப்பப்படும் கருத்துகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.