மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குசவபட்டி கிராமத்தில் கிரஷர் வைக்க விண்ணப்பித்தார். இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார். வழக்கப்படி, தாலுகா தாசில்தார் ஆய்வு மேற்கொள்வது அவசியம். அந்த வகையில் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த பெரிய தொகையை தர முடியாது என்று ரஞ்சித் மறுத்ததாக தகவல். பின்னர் பேச்சுவார்த்தையில், லஞ்சத் தொகையை 70 ஆயிரமாகக் குறைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித், நேரடியாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதிபிரியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்த அதிகாரிகள், ரசாயனம் தடவிய 70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரஞ்சித்திடம் கொடுத்தனர். அதன் பேரில், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ரஞ்சித் பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தார். உடனே கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜபாண்டியை கைது செய்தனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்திலேயே நடந்தது என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், அதை வழங்காமல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு இந்தச் சம்பவம் ஆகும். மதுரையில் நடந்த இந்த கைது சம்பவம், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை ஏற்படுத்தியுள்ளது.