ஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில் இடைவிடாத மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், முக்கிய சாலைகள் உட்பட பல இடங்கள் சேறும் சகதியுமாக மாறி வருகின்றன.
இதனால், வாகன போக்குவரத்து மிகவும் கடினமாகிவிட்டது. விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கனமழை மற்றும் மின்னல் தாக்குதலால் தெலுங்கானாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை மாலை கத்வால் மாவட்டத்தின் பூம்பூர் கிராமத்தில் இடைவிடாத மழை காரணமாக வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் ஒரு பனை மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தனர். மின்னல் தாக்கி சர்வேஷ், பார்வதி மற்றும் சௌபாக்கியா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
மற்ற நான்கு பேர் காயங்களுடன் தப்பினர். இதேபோல், நிர்மல் மாவட்டத்தில், மின்னல் தாக்கி வெங்கட், எல்லைய்யா மற்றும் அவரது மனைவி எல்லம்மா ஆகிய மூன்று பேர் இறந்தனர். கம்மம் மாவட்டத்தில், சத்யநாராயணபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி மகேஷ் மற்றும் வீரபத்ரய்யா ஆகிய இரண்டு விவசாயிகள் இறந்தனர்.