புதுடில்லி: இந்தியா – அமெரிக்கா இடையே கடல் கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. நீண்டதூர கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு திறனுக்காக 6 புதிய பி-8ஐ ரோந்து விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ரஷ்ய எண்ணெய் தொடர்பான வர்த்தக பிரச்சினைகள் காரணமாக இரண்டு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போயிங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, வரும் செப்டம்பர் 16 முதல் 19 வரை டில்லிக்கு வர இருக்கின்றனர். அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை நிறைவு செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு துறையில் மீண்டும் நெருக்கமான உறவு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய கடற்படையின் வசம் 12 பி-8ஐ விமானங்கள் உள்ளன. இதில் 8 விமானங்கள் 2009ல் சேர்க்கப்பட்டன; 4 விமானங்கள் 2016ல் இணைக்கப்பட்டன. மேலும் 10 விமானங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 6 விமானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அமெரிக்கா இந்த விற்பனைக்கு அனுமதி அளித்தது. இப்போது அந்த செயல்முறை நடைமுறைக்கு வருகிறது.
சமீப காலங்களில் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனை கண்காணிக்க இந்திய கடற்படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பி-8ஐ ரோந்து விமானங்கள் சேர்க்கப்பட்டால், நம் கடற்படையின் கண்காணிப்பு திறன் மட்டுமல்லாமல், பாதுகாப்பு நிலையும் மிகுந்த வலுவடையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.