சென்னை: இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர், “இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்.
நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.
மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். பா.ஜ.க. முதன்முதலில் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்கிறது. இந்த வரிசையில்தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க பா.ஜ.க. அரசு முயன்றது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம்.
இந்தியைத் திணிப்பதில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. மத்திய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு.
நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.