திருச்சூர்: மத்திய அமைச்சர் மற்றும் கேரள எம்.பி. சுரேஷ் கோபி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். வீடு கட்ட உதவி கேட்டு வந்த வேலாயுதன் என்ற நபரின் மனுவை அவர் நிராகரித்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ வெளியானதும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
இது குறித்து சுரேஷ் கோபி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “ஒரு கவனக்குறைவால் நிகழ்ந்த விஷயத்தையே சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்தி பிரச்னையாக்குகின்றனர். விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் பொறுப்பு என்னிடம் இல்லை” என்று தெரிவித்தார். மேலும், இத்தகைய நிகழ்வுகளை தேவையற்ற அரசியல் பிரச்சினைகளாக மாற்ற வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சராகிய அவர், பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு ஒரு நடைமுறையுள்ளது என்றும், அதனைப் பின்பற்றியே உதவி வழங்கப்படும் என்றும் விளக்கமளித்தார். ஆனால், சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டே இந்தச் சம்பவத்தை பெரிதாக்கி மக்களிடம் தவறான புரிதலை உருவாக்க முயற்சிக்கின்றன என்றும் சுரேஷ் கோபி குற்றம்சாட்டினார்.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டாலும், சுரேஷ் கோபியின் ஆதரவாளர்கள் அவரது நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றனர். “எல்லாவற்றையும் பிரச்னையாக்கும் மனப்போக்கு அரசியல் சூழலை சீர்குலைக்கும்” என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், தேர்தல் சூழலில் அரசியல் சூடுபிடிக்க காரணமாகியுள்ளது.