தஞ்சாவூர்: சொக்கநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூவாணம் கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலையை 200 நாளாகவும் அதிகரித்து வழங்க வேண்டும். பூமிதான இயக்கம் வழங்கி, அனுபவித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மயானச் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.
சொக்கநாதபுரம் கூட்டுறவு சங்கத்தை சீரமைக்க வேண்டும். கறவை மாடு கடன் வழங்க வேண்டும். உள்ளூர் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். ஏழுகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பூவாணம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைத்து தர வேண்டும். கிராமச் சாலைகளை சீரமைக்க வேண்டும். கீழப்பூவாணம் கிராமத்தில் பால் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூவாணம் கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் சி.நவநேசன்,தலைமை வகித்தார்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கிளைச் செயலாளர் எஸ்.எழிலரசன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் எம்.கஜேந்திரன், எஸ்.பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் சங்கம் ராஜேஷ் கண்ணா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் அலுவலர்கள், போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.