சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் புதிய விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, விலை ஸ்டிக்கர்கள் குறித்து முந்தைய கடுமையான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இப்போது நிறுவனங்கள் தங்களது விருப்பப்படி புதிய விலை ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளலாம். மேலும், முன்பு இருந்தபடி இரண்டு செய்தித்தாள்களில் புதிய விலை அறிவிக்க வேண்டிய கட்டாயமும் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருத்தப்பட்ட எம்ஆர்பி தெளிவாகக் காட்டப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் பால், பன்னீர், வெண்ணெய், ஜாம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல நுகர்வோர் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கத் தொடங்குகின்றன. மதர் டெய்ரி, மில்க் ஷேக் முதல் சீஸ் கியூப்ஸ் வரை பல பொருட்களின் விலையை குறைத்துள்ளது. உதாரணமாக, 200 கிராம் பன்னீர் ₹95-இல் இருந்து ₹92 ஆகவும், 180 மில்லி மில்க் ஷேக் ₹30-இல் இருந்து ₹28 ஆகவும் குறைந்துள்ளது.
மேலும், முன்பு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட ஐஸ்கிரீம்கள் இப்போது 5% மட்டுமே வரிக்குள் வந்துள்ளதால், சாக்லேட் பார், கப்புகள், கோன்கள் போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு நேரடி நன்மை கிடைக்கப்போவதாக அரசு உறுதி அளித்துள்ளது.