கொல்கத்தா: மழை காரணமாக, கொல்கத்தா நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நள்ளிரவில் பெய்த மழையால், ஏராளமான மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மெட்ரோ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் வடகிழக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் பெய்த மழையால் ஒருவர் இறந்தார். வெள்ளம் காரணமாக 14 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.