கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்திக்காக நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கும்பகோணம் வீரசைவ மடத்தில் ரசாயனம் கலக்காமல் இயற்கை பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காகிதக் கூழ் மம்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் யு.குமார் கூறியதாவது: நீர்நிலைகளில் ரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை கரைத்தால் தண்ணீர் மாசுபடும். நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும்.
இதை மனதில் வைத்து, ரசாயனம் கலக்காமல், இயற்கை பொருட்களை பயன்படுத்தி, சிலைகளை செய்து வருகிறோம். இதற்காக சேலத்தில் இருந்து மரவள்ளி கிழங்கு மாவையும், கோவையில் இருந்து பேப்பர் கூழ்களையும் மொத்தமாக வாங்கி விநாயகர் சிலைகளை வடிவமைத்து பல்வேறு வண்ணங்களில் வண்ணம் தீட்டி விற்பனை செய்கிறோம். இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது, எளிதில் கரைந்து, காகிதக் கூழை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும். நீர்நிலைகளும் மாசுபடுவதில்லை. 1 அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சிலைகள் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ரங்கநாத விநாயகர், சூரம்சம்ஹார விநாயகர், குழந்தை வர விநாயகர், சிவரூப விநாயகர் என 4 வகையான புதிய விநாயகர் சிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை தவிர, 30 வடிவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை தயார் செய்துள்ளோம், என்றார்.