தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் இப்போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா, வல்லம் பெரியார் சிலை வரை சென்று மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.
இதில், 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 165 மாணவர்களும், 142 மாணவிகளும் மொத்தம் 307 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 ஆம் இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ. 250 வீதம் என மொத்த பரிசுத் தொகை ரூ. 70 ஆயிரத்து 500 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ. டேவிட் டேனியல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார்) செந்தில், மூத்தோர் தடகள சங்கத் தலைவரும், தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவருமான து. கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ. கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.