மதுரை: எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அங்கு செயல்பட்டு வரும் தனியார் மருத்துவகல்லூரியில் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் முகேஷ் குமார், இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார்.
இதனை அறிந்த அவரது பெற்றோர், மகனுக்கு அறிவுரை கூறி திட்டியதோடு, முகேஷ்குமார் வைத்திருந்த செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு முகேஷ்குமார் ஆளானார். மேலும் பெற்றோரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.
தேர்வில் இரு பாடங்களில் பெயில் ஆனதால் பெற்றோர் அறிவுரை கூறி திட்டியதோடு செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் கடும் விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் பலமுறை தட்டிப்பார்த்தும் அறைக்குள் இருந்து எந்த விதமான பதிலும் வர வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் முகேஷ் குமார் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது
அறையின் மின் விசிறியில் முகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷ்குமார் விடுதியில் அளித்த முகவரியின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.