தஞ்சாவூர்: தஞ்சை அருகே 8 நம்பர் கரம்பை பைபாஸ் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்மணிகளை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும்.
ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி முடிந்து அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஒரு ோக சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் தஞ்சை அருகே ஆலக்குடி, 8நம்பர் கரம்பை, சிவகாமிபுரம், சித்திரக்குடி, கல்விராயன் பேட்டை என பல பகுதிகளில் குறுவை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அறுவடை செய்யும் குறுவை நெல்லை விவசாயிகள் கதிர்களை 8 நம்பர் கரம்பை பைபாஸ் சாலையில் காயவைத்து வருகின்றனர்.