ஆமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த இரண்டு போட்டிகள், இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ரோஹித், கோலி, அஷ்வின் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் தலைமையில் புதிய தலைமுறையுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இந்தியா கடைசியாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 2024 நவம்பரில் விளையாடியது. அதன் பின் இங்கிலாந்து மண்ணில் 2-2 என தொடர் சமனில் முடித்து ஆற்றலுடன் திரும்பியது. தற்போது சுப்மன் கிலின் தலைமையில் லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜுரல் போன்றோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். பும்ரா, சிராஜ் வேகப்பந்து தாக்குதலை முன்னெடுக்க, ஜடேஜா மற்றும் குல்தீப் சுழலில் பங்களிக்க உள்ளனர்.
மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணி ஜமைக்கா டெஸ்டில் 27 ரன்னில் சுருண்ட சோகத்திலிருந்து இன்னும் மீளாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. காயம் காரணமாக ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப் விலகியதால், பவுலிங் பலவீனமாக காணப்படுகிறது. ராஸ்டன் சேஸ் தலைமையிலான அணியில் சந்தர்பால் மகன் டகநரைன், அலிக் அதானஸ் போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 100 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 23, வெஸ்ட் இண்டீஸ் 30 வெற்றிகளைப் பெற்றுள்ளன. கடந்த 23 ஆண்டுகளாக இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் டெஸ்டில் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் நிலையை தீர்மானிக்கக்கூடும்.