வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள எஸ்டிஆர் 49 திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருவதால், ஒரு சிறிய முன்னோட்டம் கூட ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாகும்.
முன்னதாக, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, எஸ்டிஆர் 49 ப்ரொமோ வீடியோ அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதோடு, சிம்பு டப்பிங் செய்த புகைப்படங்களையும் வெளியிட்டதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்துக்கு சென்றது.

ஆனால், புதிய தகவலின்படி சென்சார் பணிகள் முடிந்த பிறகே இந்த ப்ரொமோ வெளியாகும் என்று தாணு தெரிவித்துள்ளார். இதனால் நாளை ப்ரொமோ வெளியாகாது என்பதும் உறுதியாகிறது. சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “ரசிகர்களின் நீண்டநாள் பொறுமைக்கும் அன்புக்கும் ஈடாக, திரையரங்குகளிலும் இணையத்திலும் ஒரே நேரத்தில் ப்ரொமோ வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.
இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். சிலர் தீபாவளியை முன்னிட்டு ப்ரொமோ வெளியிட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடசென்னை உலகத்தை ஒத்த வகையில் உருவாகும் இந்த காம்போ படத்தில், சிம்பு கேங்ஸ்டராக மாறுவார் என்றும், அவர் புதிய லுக்கிலும் ரசிகர்களை அதிர வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. ப்ரொமோ வெளியாகியதும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.