புதுடில்லி: இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அறிவும் திறமையும் தான் அடிப்படை வலிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீஹாருக்கான ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
இந்தியாவில் இளைஞர்களின் பங்கு அதிகம், அவர்களின் அறிவாற்றலே நாட்டை முன்னேற்றும் சக்தி என்று மோடி வலியுறுத்தினார். பீஹார் மாநிலம் இளைஞர்கள் நிறைந்த மாநிலம் என்பதால், அங்கு முன்னேற்றம் அதிகரித்தால் நாடு முழுவதும் வலிமை பெருகும் எனக் கூறினார். கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் நவீன வசதிகளின் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பீஹாரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த உதவித் தொகை, இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதிலும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் உதவும் என்று அவர் கூறினார்.
மாநில முதல்வர் நிதிஷ் குமார் இதை பெருமையாகக் குறிப்பிட்டார். ”இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வலுப்படுத்த இந்தத் திட்டங்கள் முக்கிய பங்காற்றும். பீஹாரின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு பெரிய முன்னேற்றப் பயணமாக இது அமையும்” என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் அறிவு சார்ந்த வலிமையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல தளமாக இந்த முயற்சிகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.