சீர்காழி: திருவாளி ஏரியில் சிலர் சட்ட விரோதமாக மண் எடுத்து வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டி மக்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாளி ஏரியில் திருவாளி ஏரியில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் விவசாயிகள் விளை நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துவரும் நிலையில், சிலர் சட்ட விரோதமாக மண் எடுத்து வியாபாரம் செய்வதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிக எண்ணிக்கையில் டிராக்டர்கள், லாரிகளில் மண் அள்ளிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
சீர்காழி- பூம்புகார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த வட்டாட்சியர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மண்குவாரியை போலீசார் மூடியதால், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.