சென்னை: தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி சென்னையில் வரும் 8ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் யுவராஜ், நாராயணன், தீனன், காமராஜ் உள்ளிட்டோர் கூட்டாக அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக அமலாக்கத் துறையின் சோதனைக்குப் பின் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. .
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், “மூன்றாம் தரப்பினர் அதாவது ஒப்பந்ததாரர் தலையீடு இல்லாமல் மணல் குவாரிகளை அரசே நேரடியாக நடத்த வேண்டும்” என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு தாமதமின்றி மணல் குவாரிகளை திறக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு கூடுதல் மணல் தேவைப்படுவதால், மணல் குவாரிகளையும் அதிக அளவில் திறக்க வேண்டும்.
மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனைக்கு வழங்குகின்றனர். தமிழகத்தில் இருந்து மணல், எம்.சாண்ட் போன்றவை கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் ஆந்திராவில் இருந்து ஆற்று மணல் கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
மணல் குவாரிகள் மூடப்பட்டதால் 55,000 லாரிகள் முடங்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பாலாற்றில் 10 ஆண்டுகளாக மணல் அள்ளப்படவில்லை. மணல் அள்ளப்படும் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
எனவே கூடுதலாக அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 8ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மூடப்பட்ட 17 மணல் குவாரிகளுக்கு. நாளை மறுநாள் 9ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கூறினார்கள்.