சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உறுதியை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழர் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் நைனார் நாகேந்திரன்.
அதன்படி, மதுரையில் இன்று முதல் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் 13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு, 15-ம் தேதி சென்னை வடக்கு, 16-ம் தேதி மத்திய சென்னை, 24-ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர், 25-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29-ம் தேதி நாமக்கல் கிழக்கு ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்து, நயினார் நாகேந்திரன் நவம்பர் 3-ம் தேதி ஈரோடு தெற்கு, நவம்பர் 4-ம் தேதி கோவை வடக்கு, நவம்பர் 5-ம் தேதி நீலகிரி, நவம்பர் 6-ம் தேதி திருப்பூர் தெற்கு, சேலம், தர்மபூர், தஞ்சாவூர் தெற்கு ஆகிய இடங்களுக்கு 28 நாள் பயணத்தை மேற்கொள்வார். பின்னர் நவம்பர் 22-ம் தேதி தூத்துக்குடி தெற்கில் தனது பயணத்தை முடிப்பார்.
பின்னர் நவம்பர் 24-ம் தேதி தேனியில் தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்குவார். இதற்கிடையில், சென்னையில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக பொதுக் கூட்டங்களை நடத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.