இரவில் போதிய நேரம் தூங்காமல் இருந்தால் உடல் மட்டுமல்ல, மனதிலும் பெரிய தாக்கம் ஏற்படும். ஒரு இரவு தூக்கம் குறைந்தால் மறுநாள் சோர்வு, கவனம் குறைவு ஏற்படும். ஆனால் இது தினசரி பழக்கமாகிவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மன அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

மனித உடல் சரியான செயல்பாட்டுக்காக தினமும் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கமின்மை காரணமாக ரத்த அழுத்தம் உயர்வதும், ஹார்மோன் சமநிலை பாதிப்பதும் நடக்கும். இதனால் நீண்ட காலத்தில் மனநிலை மாற்றங்கள், ஞாபக மறதி, எமோஷனல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
நல்ல தூக்கம் பெற சில வழிமுறைகள் — தினமும் ஒரே நேரத்தில் படுக்கவும் எழவும். படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல், டிவி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை விட்டு விலகுங்கள். இரவு உணவை குறைந்தது மூன்று மணி நேரம் முன்பு முடிக்கவும். தூங்குவதற்கு முன் லேசான உடற்பயிற்சி, தியானம் அல்லது யோகா செய்து மனதை அமைதிப்படுத்துங்கள்.
தூக்கம் என்பது உடல் ஓய்வுக்காக மட்டுமல்ல, மன அமைதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடித்தளமாகும். எனவே தினமும் போதிய நேரம் உறங்குவது உங்கள் வாழ்க்கையை நீடிக்கும் சக்தியாகும்.