தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தூத்துக்குடியில் பெய்துவரும் பலத்த மழையால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. மருத்துவமனை உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதி மற்றும் மகப்பேறு பிரிவு குழந்தைகள் வார்டு காய்ச்சல் பிரிவு மற்றும் மனநல மருத்துவ பிரிவு மேலும் சமையல் செய்யும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பெய்துவரும் பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காலங்கரை பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மாநகராட்சி அலுவலகப் பகுதி, காந்தி சிலை, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், தூய பேட்ரிக் தேவாலயத்திலும் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் மணல் குண்டு அருகே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில், 5 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் தாமிரபரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சேரும் சகதியுமாக, திருந்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர் கனமழை காரணமாக, ஓடைகள், குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3 நாட்களாக தொடரும் மழையால், ராபி பருவத்தில், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.