சென்னை: கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பி.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13 செ.மீ. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. வேலூர் மாவட்டம் காட்பாடியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வெப்பமண்டல புயலின் சுழற்சி குறைந்ததாலும், மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தாலும் தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகள், வடகிழக்கு கடலோர பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை பலத்த காற்று வீசும்.
மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக் கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.