சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராக பணியாற்றிய மு.கருணாநிதி, 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி இதே நாளில் காலமானார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் 6-வது நினைவு தினம் இன்று ஆகஸ்ட் 7-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காலை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி புறப்பட்டது.
முன்னதாக சிலைக்கு அடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், அமைதிப் பேரணியாகச் சென்ற அவர், காலை 8.45 மணிக்கு அண்ணா சமாதியிலும், பின்னர் கருணாநிதி சமாதியிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.