டாக்கா: தொடர் தாக்குதல்… வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், இந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனால் இந்துக்கள் பலர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்கின்றனர்.
வங்கதேசத்தில் வசிக்கும் 17 கோடி பேரில் 8 சதவீதம் பேர் இந்துக்கள். இவர்கள் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரித்து வந்தனர். ஹசீனாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்த நிலையில் இந்துக்களின் வீடுகள், கோயில்கள், வணிக வளாகங்களை குறிவைத்து வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அங்கு அவர்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்துக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்ததுடன் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும் வன்முறையாளர்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.
அந்நாட்டின் எதிர்க்கட்சியான கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி தலைவர் ஒருவரும் , ‛ யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் ‘ எனக்கூறியுள்ளார்.