தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 7,092 ஏக்கரில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து கிராமத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கணக்கெடுப்பு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 92 ஏக்கர் அளவுக்கு பயிர்கள் தண்ணீரில் சூழப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான வயல்கள் விவரம் தெரிய வரும்.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக வேண்டுமென்றே பொய் சொல்கின்றனர்.
இந்த ஆட்சியைப் பற்றி முன்னாள் முதல்வரான எதிர்க்கட்சித் தலைவர் தவறாக கூறி வருகிறார். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 7.27 லட்சம் டன் நெல்லை சேமிக்கும் அளவுக்கு மட்டுமே கிடங்குகள் இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் 4.32 லட்சம் டன் கொள்ளளவுக்கு புதிதாக கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சம் டன் அளவுக்கு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 7.32 லட்சம் டன் கூடுதலாக நெல் வைக்கும் அளவுக்கு கிடங்குகள் அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் குறுவை பருவத்தில் நெல் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதே போன்று சம்பா பருவத்திலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அப்போது, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் பா. முருகேஷ், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், வேளாண் இணை இயக்குநர் கோ. வித்யா, துணை இயக்குநர்கள் மா. சாமுவேல், எஸ். அய்யம்பெருமாள், ஆர். சாருமதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.