திருச்சி: வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கவே தமிழ்நாட்டில் S.I.R. நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரமாக மாறி உள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டு பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் தலைகுனிய வேண்டியதாக உள்ளது.
ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது. கடும் சட்டங்கள் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.
துரோகத்தைப் பற்றி, சமூக நீதி, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஆரியத்தை எதிர்க்க வந்தது திராவிடம் என்கிறார்கள். தமிழன் என்று வந்தால் பார்ப்பனர்கள் நானும் தமிழன் என்று உள்ளே வந்து விடுவார் என்று வீரமணி போன்றவர்கள் பேசுகிறார்கள்.
அதே கருத்தை தான் அ.தி.மு.க.வினரும் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா தலைமையை இவர்கள் எப்படி ஏற்றார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் பா.ஜ.க. தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்து பார்க்கிறார்கள். அப்போதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும்.
ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. 2 மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும். பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செய்கிறார்கள்.
அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றும் ஒரு பீகாராக மாறிவிடும். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்து உள்ளார். இந்த முறையே தவறு, இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுகிறார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் பொதுவான இடத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் அங்கு வந்து பேசிவிட்டு செல்லட்டும். மக்கள் அதை பார்த்து ஓட்டு போடட்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார். மற்ற நாடுகளில் இங்கு செய்வது போன்ற பிரசாரம் போன்ற நிலை இல்லை. வருகின்ற தேர்தலில் இங்கு கட்சிகளுக்கு போட்டி அல்ல கருத்துகளுக்கு தான் போட்டி. நான் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் ஜெயிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உடன் இருந்தார்.
,