சென்னை: ஆட்டோக்களில் சரக்குகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் ஆட்டோக்களில் சரக்கு ஏற்றிச் செல்லப்படுகிறது என்ற புகார்கள் வந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் சொந்த பயன்பாட்டிற்கான இரு சக்கர வாகனங்கள், கார்கள், விதிகளை மீறி, வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையில், சென்னையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹூசேன். உரிமை குரல் ஓட்டுநர் சங்கத் தலைவர் சுடர்வேந்தன், உரிமை கரங்கள் பொதுச் செயலர் வெற்றிவேல், தனியார் செயலி வாயிலாக, முன்பதிவு செய்து சரக்குகளை எடுத்து செல்லும், தனியார் செயலி நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சிவகுமரன் கூறுகையில், ஆட்டோக்களிலும் 50 முதல் 100 கிலோ வரை சரக்குகள், காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது.
பயணியருக்காக அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்களில் சரக்குகளை எடுத்து செல்வது விதிமீறலாகும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.