சென்னை: சென்னை: ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம்.
தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் தெரிந்து கொள்வோம். அந்த வகையில் ‘சிறுகண் பீளை’ எனும் மூலிகை குறித்துப் அறிவோம்.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுப் பல நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம். அவற்றில் முக்கியமானது, சிறுநீரகப் பாதிப்பு. ஏனெனில் உடலுக்குள் சேரும் நஞ்சை வெளியேற்றும் முக்கியமான வேலையைச் செய்பவை, சிறுநீரகங்கள்தான்.
அதே நேரத்தில் நாம் உண்ணும் இயற்கைக்கு முரணான உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவையும் சிறுநீரகங்கள்தான். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவது அல்லது முற்றிலும் செயலிழந்து போவது, சிறுநீரகங்கள் வீங்குவது அல்லது சுருங்குவது ஆகியவைதான் இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்னைகள். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக இருக்கும், அற்புத மூலிகைதான் சிறு கண் பீளை. ‘பூளைப்பூ, ’பொங்கல் பூ’, ‘சிறு பீளை’ எனவும் இது அழைக்கப்படுகிறது.
மழைக்காலம் முடிந்ததும் பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும். இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. மார்கழி மாதத்தில், அதாவது பொங்கல் நெருங்கும் சமயத்தில் இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். இலையைக் கண்ணாகவும், அதையொட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் கற்பிதம் செய்தே இதற்குச் ‘சிறுகண் பீளை’ என்று பெயர் வைத்துள்ளனர்.
பொங்கலுக்கு முதல் நாள், வீட்டு வாசல் நிலையில் சிறு கண் பீளைப் பூங்கொத்தைச் செருகி வைக்கும் பழக்கம் இன்றும் உண்டு. இச்செடியை ஒத்த இன்னொரு தாவரமும் உண்டு, அது பாடாண பேதி. சிறுகண் பீளையைப் போலவே கொஞ்சம் பெரிய இலைகளையும், பெரிய பூவையும் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் ‘பெருங்கண் பீளை’. இவற்றுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால்… இவை மூன்றுக்குமே சிறுநீரக நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை உண்டு.
கல் கரைத்தல் மற்றும் நீர் பெருக்குதல் ஆகியவற்றுக்காக இம்மூன்று செடிகளையும் சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இம்மூன்று செடிகளையுமே பொதுவாக, பீளைப்பூ என ஒரே பெயரில்தான் அழைக்கிறார்கள்.
இம்மூன்று மூலிகைகளின் வேர்களுக்கும் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் தன்மை உள்ளது. பூ, தண்டு, இலை ஆகியவை சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இம்மூலிகைகளைச் சமூலமாக வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரைப் பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றன.