நெல்லை: நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெகுவாக பயன்பெறுவார்கள்.
தென்னிந்தியாவின் ஆகஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் நெல்லை மாவட்டம் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் நெல்லையில் அதிகமாக உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் அறிவியல் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.
அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.