தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி எஸ்டி.டி திருமண மண்டபத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் தறை ,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் டி.அனுசுயா வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, தனது சொந்தச் செலவில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான சேலை, பழங்கள், வளையல், பூ, மஞ்சள், குங்குமம், மலர் மாலை, வேப்பங்காப்பு, வெற்றிலை பாக்கு இவற்றுடன் ரூபாய் 100 ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கி வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து 250 கர்ப்பிணிப் பெண்கள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என ஐந்து வகையான சாதத்துடன் மதிய விருந்து வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பேசுகையில், “கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. இன்று 250 பேருக்கும் தாயாக, தந்தையாக இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் சார்பில் இந்த வளைகாப்பு விழாவை தமிழகம் முழுவதும் நடத்தி வைத்துள்ளார். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இன்றைக்கு குடும்ப அட்டைக்கு மகளிர் உரிமை தொகையாக 5,000 ரூபாய் வழங்கியுள்ளது. நீங்கள் அனைவரும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றியக்கழக செயலாளர்கள் க.அன்பழகன், குழ.செ.அருள்நம்பி, செ.ஞானப்பிரகாசம், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், எம்.மாரிமுத்து, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், செந்தமிழ் செல்வன், மற்றும் கந்தவேல், காமாட்சி, சொர்ணம், செல்வராணி, முனியம்மா, ஜெயா, ராணி, செல்வி, சன்மதி பாலா, இவாஞ்சலின், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.