மதுரை: மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகரப் பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மதுரை அண்ணாநகர், கலெக்டர் அலுவலகம், கோரிபாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், ரயில் நிலையம், கோமதிபுரம், பட்டநடி, ஆரப்பாளையம், கலைநகர், ஆனையூர், வள்ளுவர் காலனி, திருரங்குன்றம், சிக்கந்தர்ச்சாவடி கோவில்பாப்பாக்குடி அத்தலை, பழங்காநத்தம், மாதாகுளம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழையால் மதிச்சியம், கரும்பாலை, மேலவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில சாலைகளில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. கனமழை காரணமாக மாமதுரை நிகழ்ச்சிகள் நடைபெற்ற தமுக்கம் மைதானம், காந்தி மியூசியம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளும் ஓரளவு தேங்கின.