நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதையொட்டி இன்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோழர்களின் ஆட்சியின் போது நாகை ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. காலப்போக்கில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே நாகையில் இருந்து மீண்டும் கப்பலை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து “செரியபாணி” என்ற பயணிகள் கப்பல் கொண்டு வரப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் இரு நாட்டு பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் 23ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்று நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற கப்பல் இயக்கப்படும். அந்தமானில் இருந்து சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கடந்த 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு கப்பல் வந்தது.
இதையடுத்து நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் 15ம் தேதிக்கு பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. நாகையில் இருந்து கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது. கப்பல் மீண்டும் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலையில் மலை நாகை வந்தடையும்.