சென்னை: இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ள இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்று இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மைதானத்தில் உள்ள மன உறுதி முதல் மைதானத்தில் துடிக்கும் மில்லியன் கணக்கான இதயங்கள் வரை, இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.