சென்னை: ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொள்கைப்பரப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய கட்சியாகவும், நாட்டின் 3வது மிகப்பெரிய கட்சியாகவும் திகழ்ந்து வந்தது அதிமுக, கடந்த 2017ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல்வேறு உட்கட்சி மோதலை எதிர்கொண்டது.
இதனால் அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து. இதனையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஒருவர் தான் ஓ.பன்னீர் செல்வம், அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து சட்டபோராட்டங்களையும் அவர் நடத்திய நிலையில், எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அடுத்ததாக பாஜகவின் ஆதரவாளராக மாறிய ஓ.பன்னீர் செல்வம், தன்னை அதிமுகவில் மீண்டும் இணைத்து வைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அங்கும் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியதால் தனித்து விடப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம், இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதே நேரம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளும் என்ன செய்வது என தெரியாமல் தவித்த நிலையில் , முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவியானது வழங்கப்பட்டது.
இதனையடுத்து தற்போதைய ராஜ்யசபா எம்பி தர்மர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மீண்டும் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் பொறுப்பில் நியமிக்கப்படடுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.