சென்னை: வயநாடு பேரிடரில் வீடுகளை இழந்த 100 பேருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வயநாடு பேரிடர் காரணமாக, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா, மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்த ராஜுலு உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று (ஆகஸ்ட் 9) கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: வயநாடு பேரிடரில் வீடுகளை இழந்த 100 பேருக்கு எங்கள் சங்கம் சார்பில் வீடு கட்டித்தர தயாராக உள்ளோம். இம்முயற்சிக்கு கேரள மாநில அரசு ஆதரவும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
வயநாடு பேரிடர்களுக்கு உதவ விரும்பும் வணிக உரிமையாளர்கள் நீலகிரி மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு சங்கத்தின் மக்கள் நலத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.