தஞ்சாவூர்: வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அசராத, ஓய்வில்லாத அதிரடி தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் முந்தி ொண்ட திமுகவின் வேட்பாளர் சண்.ராமநாதன் வெற்றி நிச்சயம் என்று தேர்தல் விமர்சகர்களும், நடுநிலையான மக்களும் திட்டவட்டாக தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி என்றாலே அரசியல் பார்வையில் முக்கிய இடம் பிடிக்கும் தொகுதியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோயில், சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை, தமிழ்ப் பல்கலைக்கழகம், மாரியம்மன் கோயில், பீரங்கி மேடு என்று பழமையும், புதுமையும் நிறைந்த தொகுதியாகும்.
இந்தத் தொகுதி தஞ்சாவூர் வட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்டது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியும், வல்லம் பேரூராட்சியும் இடம்பெற்றுள்ளன. புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேல சித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இத்தொகுதி. இதில், கள்ளர், ஆதிதிராவிடர்கள், சிறுபான்மையினர் கணிசமான அளவில் உள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்றது. இந்த தொகுதியில்தான் மறைந்த முதல்வர் மு. கருணாநிதி 1962ம் ஆண்டில் வெற்றிப் பெற்று திமுகவின் கோட்டையாக மாற்றினார். அப்போது முதல் இத்தொகுதி திமுகவின் பலமான கோட்டையாகக் இருந்து வருகிறது. 1967, 1984 இடைத்தேர்தல், பொதுத் தேர்தலில் காங்கிரசும், 1991, 2011, 2016-ல் அதிமுகவும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றது. இத்தொகுதி இதுவரை இரண்டு இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 18 சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 10 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை மீண்டும் வெற்றி பெற்று தஞ்சை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேட்பாளர் சண்.ராமநாதன் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் அதிதீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொகுதியில் பிரச்சினைகளாக இருந்தவை என்றால் தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே ஜபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு. கோடைகாலத்தில் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகும் சம்பவம் நீண்டகாலமாக நடந்து வந்தது. இதை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பெரியகோயில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை மிக அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாதது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு போன்றவை நீண்டகால பிரச்சினைகளாக இருந்தன.
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சண். இராமநாதன் கடந்த 2006, 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு தஞ்சாவூர் நகர்மன்ற உறுப்பினரானார். பின்னர், 2022-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் இம்முறை சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டாலும், மேயராக இருந்தபோது மாநகரிலும், சுற்றியுள்ள கிராம மக்களிடமும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். மேலும், மேயராக இருந்த காலத்தில் ஜபமாலைபுரம் குப்பைக்கிடங்கிற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினார்.

தீவிபத்து சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டார். நிலுவையில் இருந்த பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சிறப்பான பேருந்து நிலையமாக மாற்றி நவீன வசதிகளை செய்தார். பெரிய கோயில் பகுதியில் கார் பார்க்கிங் வசதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள், குடிநீர் தட்டுப்பாடின்றி சீராகக் கிடைக்கச் செய்தது, நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் அமைத்தது, ஆக்கிரமிப்பில் இருந்த அரசு கட்டிடங்களை மீட்டது, தரமான சாலைவசதிகள் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது போன்றவை இவருக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஹைட்ராலிக் லிப்ட் கார் பார்க்கிங் வசதி, ராஜப்பா பூங்கா சீரமைப்பு, சாமந்தான்குளம், அய்யங்குளம் சீரமைப்பு, புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்த தனி வசதி, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் ரவுண்டானாக்கள் என்று தஞ்சாவூரை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் அதிமுகவிடம் இரு முறை இழந்த திமுக 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தல், 2021 தேர்தல் என தொடர்ந்து வெற்றி பெற்றது. எனவே, இந்த முறையும் இத்தொகுதியைத் தக்க வைக்க திமுக வலுவாக களம் இறங்கி உள்ளது. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், மேயராக இருந்தவருமான சண்.ராமநாதனின் எளிமையான பிரச்சாரமும், அதிரடியான அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பும் தஞ்சை தொகுதியை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றிவிடும் என்று நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.