குஜராத்: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்… குஜராத் மாநிலத்தின் 15 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
காந்திதாம், கட்ச் மாவட்டத்தின் புஜ், மாண்ட்வி, முந்த்ரா, அஞ்சார் உள்ளிட்ட 15-ல் 9 மாநகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, சுரேந்திரநகர், ஜாம்நகர், போர்பந்தர், கரம்சாத்-ஆனந்த், நதியாட், நவ்சாரி, வாபி, சூரத் மற்றும் மோர்பி ஆகிய மாநகராட்சிகளில் மொத்த இடங்களில் பாதிக்கும் மேலானவற்றை பா.ஜ.க வென்றுள்ளது.
குறிப்பாக, மோர்பி மாநகராட்சியில் உள்ள அனைத்து 52 இடங்களையும் பா.ஜ.க முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.மொத்தம் உள்ள 9,900 இடங்களில் பா.ஜ.க 6,472 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 1,412 இடங்களையும், ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சிகள் 597 இடங்களையும் பிடித்துள்ளன.
வடோதரா மாநகராட்சியின் 15-வது வார்டில், பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆசிஷ் ஜோஷி அமோக வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே, தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த 15-வது வார்டுதான், ஜன.2024-ல் நடந்த ‘ஹர்னி படகு விபத்தில்’ 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த பகுதியாகும்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டுப் போராடியதால், கடந்த மே 2025-ல் பா.ஜ.க.விலிருந்து ஜோஷி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார்டில் அதிகபட்சமாக 56% வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் பா.ஜ.க வென்றாலும், பழங்குடியின மாவட்டமான நர்மதாவில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாவட்ட பஞ்சாயத்து, டெடியாபாடா, சாக்பாரா, சிக்தா ஆகிய 3 தாலுகா பஞ்சாயத்துகளையும் ஆம் ஆத்மி கட்சி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
மேலும், பரூச் மாவட்டத்தின் வாலியா தாலுகா பஞ்சாயத்து மற்றும் ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) அமைந்துள்ள நர்மதா மாவட்டத்தின் கருடேஷ்வர் தாலுகா பஞ்சாயத்தையும் ஆம் ஆத்மி வென்றுள்ளது. இது பாஜகவிற்கு ஒரு கௌரவப் போராட்டமாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி அங்கு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தம் உள்ள இடங்களில் பா.ஜ.க 160 வார்டுகளையும், காங்கிரஸ் 32 வார்டுகளையும் வென்றுள்ளன. பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்பட்ட ‘காடியா’ (Khadia) வார்டில் காங்கிரஸ் முழுமையாக வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஜாம்ராவல் நகராட்சியில் காங்கிரஸ் 5 வார்டுகளில் முழுமையாக வெற்றிபெற்று 21 இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது.
வெற்றி குறித்துப் பேசிய முதல்வர் பூபேந்திர படேல், “பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது X தளத்தில், குஜராத்திற்கும் பா.ஜ.க.விற்குமான பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும், குஜராத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல இன்னும் கடுமையாக உழைப்போம் என்றும் அவர் உறுதியளித்து உள்ளார்.