திருவள்ளூர்: பறக்கும் படை பறிமுதல் செய்த பொருட்களில் உரிய ஆவணம் கொடுத்தவர்களிடம் ரூ.17 கோடி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதாப் தெரிவித்துள்ளார்.
பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.16.94 கோடி பணம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதாப் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை கடந்த மார்ச் 15ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 பேரவைத் தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, உரிய ஆவணங்களின்றி மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் எடுத்து செல்லப்படும் பணம், மதிப்புமிக்கப் பொருட்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு திருவள்ளுர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதாப் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவற்றை நியமித்தார்.
திருவள்ளுர் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பிற துறைகளால், உரிய ஆவணங்களின்றி, சந்தேகத்துக்கு இடமான வகையில் எடுத்து செல்லப்பட்ட ரூ.17,70,30,547 ரொக்கம், ரூ.73,58,28,713 மதிப்புமிக்க பொருட்கள், ரூ.15,81,38,293 மதிப் புள்ள இதர வகையிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெற்றுக் கொள்ள ஏதுவாக, திருவள்ளுர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப் பட்டிருந்த மாவட்ட குறைதீர் குழு மற்றும் மாவட்ட வருமானவரித் துறை, மாநில சரக்கு மற்றும் சேவை வரித்துறை உள்ளிட்ட பிற துறைகளால், 254 மனுக்கள், பரிசீலனை செய்யப்பட்டு, உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்ட இனங்களுக்கு. ரூ.16,94,79,342 ரொக்கம், ரூ.73.09,93,756 மதிப்புமிக்கப் பொருட்கள். ரூ.64.39.113 மதிப்புள்ள இதர வகையிலான பொருட்கள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி 5 மனுக்கள் பரிசீலனையிலும், உரிய ஆவணங்கள் சமர்பிக்காத 14 கைப்பற்றுகை தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.