புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரு கும்பல் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்பனை செய்துள்ளது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 31 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) பகுதிகளில் கார்கள் அதிகளவில் திருடு போயின. குறிப்பாக டெல்லி ரோகிணி, உத்தம் நகர் பகுதிகளில் கார் திருட்டு அதிகரித்தது. சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து, நீண்ட தேடலுக்குப் பிறகு கார் திருட்டில் ஈடுபட்டு வந்த 10 பேர் கும்பலை பிடித்து உள்ளோம்.
இந்த கும்பலின் தலைவனாக தாமன் தீப் சிங் என்பவர் செயல்பட்டு உள்ளார். இவர் பஞ்சாபில் பழைய கார்களை விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினீயர், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஆகியோரும் கும்பலில் உள்ளனர்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கார்களை இந்த கும்பல் திருடி விற்பனை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அவர்களிடம் இருந்து 31 விலை உயர்ந்த கார்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் 11 பார்சூனர், 6 செல்டோஸ், 6 கிரெட்டா, 3 இன்னோவா, 2 ஸ்கார்பியோ, தலா ஒரு வென்யூ, தார், ஸ்விப்ட் கார்கள் அடங்கும்.
திருடப்படும் கார்களின் சேசிஸ், இன்ஜின் எண்களை இந்த கும்பல் மாற்றியிருக்கிறது. போலி ஆவணங்கள் மூலம் கார்களுக்கு புதிய பதிவு எண்களை பெற்றுள்ளனர். பழைய கார்கள் விற்பனையகங்கள் மூலம் திருட்டு கார்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து பெரும் தொகையை திரட்டி உள்ளனர். அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கும்பலால் விற்பனை செய்யப்பட்ட 1,000 கார்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். திருட்டு கும்பலோடு தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.