கொல்கத்தா: வரும் 21ம் தேதி அன்று மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 அன்று மறு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, மே 21 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 24 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில், ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பெருமளவிலான வாக்குச்சாவடிகளில் நிகழ்ந்த கடுமையான தேர்தல் விதிமீறல்கள் மற்றும் ஜனநாயக செயல்முறையின் சீர்குலைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் புதிதாக வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது,” என்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில், நேற்று உள்ளூர் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியானது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜக கொடிகளை ஏந்திய பெண்கள் உட்பட ஏராளமான போராட்டக்காரர்கள் ஹசிம்நகர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மத்திய ரிசர்வ் காவல் படையினர் பெருமளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தனர்.
முன்னதாக, தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில், டைமண்ட் ஹார்பர் மற்றும் மக்ரஹாட் பச்சிம் பகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.