புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் 609வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி செயலாளர் சோமநாதன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வங்கிகள் கடன் வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர் முதலீட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வங்கிகளில் முதலீடு செய்வதும் கடன் கொடுப்பதும் ஒரு வாகனத்தின் இரு சக்கரங்களைப் போன்றது. தற்போது வங்கிகளில் முதலீடு குறைந்து வருகிறது. ஆனால் கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது. முதலீட்டுக்கும் கடன் கொடுப்பதற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வேண்டும். வங்கிகளில் அதிக பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இது இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் வங்கதேசத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த முதலீடுகள் பாதுகாப்பானவை என்று நம்புகிறோம். வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கிறோம். வங்கதேசத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் இந்தியப் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.