காபூல்: ஐ.நா. சபை கடும் கண்டனம்… ஆப்கானிஸ்தானில், குழந்தை திருமணத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய குடும்ப சட்டத்துக்கு ஐ.நா., சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, சமீபத்தில், புதிய குடும்ப சட்டத்தை இயற்றியது. அதன்படி, திருமணத்தின் போது வயதுக்கு வந்த சிறுமி மவுனம் காத்தால், அது திருமணத்திற்கு அவர் அளித்த சம்மதமாக இந்த சட்டம் கருதுகிறது. இது, குழந்தை திருமணத்துக்கு மறைமுக ஆதரவு என, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கை:
ஆப்கனின் புதிய சட்டம், பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை பறிப்பதோடு, குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது. இது, முழுமையான சம்மதம் என்ற அடிப்படை கோட்பாட்டையே பலவீனப்படுத்துகிறது. மேலும், குழந்தைகளின் நலன்களை பாதிக்கிறது; கண்டனத்துக்குரியது.
ஆப்கனில், ஏற்கனவே பெண்களுக்கு பல்வேறு பாகுபாடுகள் உள்ள நிலையில், இந்த புதிய சட்டத்தால், ஏழை குடும்பங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி, தங்களின் இளம் மகள்களை குழந்தை திருமணத்துக்கு தள்ளும் அபாயம் உள்ளம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை தலிபான் அரசு நிராகரித்துள்ளது. ‘சர்வதேச சமூகத்தின் இந்த எதிர்ப்புகள், இஸ்லாமிய மதத்திற்கு முரணானவர்களின் வழக்கமான விமர்சனம்’ என, தெரிவித்துள்ளது.