சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுப்பட்டுள்ளது.
சென்னை கொளத்துாரில், தே.மு.தி.க., பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மாவை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது.
சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தோஷ் சர்மாவுக்கு, வேறு வழக்கில் தொடர்பு இல்லை என்றால், உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், நேரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.